கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் தலைவருமான அஜித் சிங், சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது 82.முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித் சிங், மேற்கு உத்தரப் பிரதேச பிராந்தியத்தின் பிரபலமான தலைவராவார்.
8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அஜித் சிங், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையிரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த அஜித் சிங், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவலை அஜித் சிங்கின் மகனான ஜெயந்த் சவுத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அஜித் சிங்கின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்