கட்சியின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அஜித் பவார் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்கள் கூட்டாக இணைந்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, அஜித் பவாரின் முடிவு கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்றும் முறையற்றது என்றும் சரத் பவார் குறிப்பிட்டார். அஜித் பவாருடன் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்கீழ் பறிபோகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட பட்டியல் சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் அஜித் பவாரிடம் இருந்ததாகவும் அதையே ஆதரவுக் கடிதம் எனக் கூறி ஆளுநரிடம் அளித்திருப்பதாகவும் சரத் பவார் தெரிவித்தார். இது குறித்து ஆளுநரிடம் முறையிடப் போவதாகவும் குறிப்பிட்டார். மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், அஜித் பவார் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சரத்பவார் தெரிவித்தார்.
இந்நிலையில் அஜித் பவாருடன் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்குச் சென்ற தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் சரத்பவாருடன் வந்து சேர்ந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் ஆலோசனை நடத்துவதற்காக எனக் கூறித் தங்களை ஆளுநர் மாளிகைக்கு அஜித் பவார் கூட்டிச் சென்றதாகவும், அவர் பதவியேற்கப் போவது தங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்தனர்.