ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு 5 ஆயிரத்து 960 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய விழாக்காலத்தை முன்னிட்டுப் போக்குவரத்துத் துறை சார்பில், மேற்கொள்ள இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 4, 5, 6 ஆகிய நாட்களில் சிறப்புப் பேருந்துகளாக ஆயிரத்து 695 பேருந்துகள் என 3 நாட்களிலும் சேர்த்து மொத்தமாக 6 ஆயிரத்து 145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நாட்களில் திருப்பூரில் இருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்துகளும், கோவையில் இருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களூரில் இருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
ஆயுத பூஜை முடிந்தபின் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் பிற ஊர்களில் இருந்து திருப்பூருக்கு 266 பேருந்துகளும், கோவைக்கு 490 பேருந்துகளும், பெங்களூருக்கு 237 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
நாள்தோறும் இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 24, 25, 26 ஆகிய நாட்களில் 4 ஆயிரத்து 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற ஊர்களில் இருந்து மூன்று நாட்களுக்கு 8 ஆயிரத்து 310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேற்கண்ட நாட்களில் திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே ஆயிரத்து 165 பேருந்துகளும், 920 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட நாட்களில் பெங்களூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 251 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 27 முதல் 30ம் தேதி வரை 4 ஆயிரத்து 627 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6 ஆயிரத்து 921 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி முடிந்த பிறகு பல்வேறு நகரங்களில் இருந்து திருப்பூருக்கு 570 பேருந்துகளும், கோவைக்கு 925 பேருந்துகளும், பெங்களூருக்கு 221 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.