ஏர்டெல் , வோடபோன் … மீளுமா..? மூழ்குமா..?

ஏர்டெல் , வோடபோன் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய தகவல் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் இந்த நிறுவனங்களின் எதிர்காலமே இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. என்ன நடக்கிறது தொலைதொடர்புத் துறையில்? விரிவாகப் பார்ப்போம் இந்தத் தொகுப்பில்…

1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்த முடியாமல் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் திணறி வரும் செய்தி, இந்தியாவில் செல்போன்களைப் பயன்படுத்தும் சாமானிய மனிதர்கள் வரையில் பேசுபொருளாகி இருக்கின்றது.  இன்று நேற்றல்ல, கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தொடங்கியது இந்த விவகாரம்.

அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதுவரை ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தினால் போதும் என்று இருந்த கட்டண முறை, நிறுவனங்களின் ஆண்டு வருவாயில் இத்தனை சதவீதத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று மாற்றப்பட்டது.

அப்போது, அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமக் கட்டணம் ஆகியவற்றிற்கு மட்டுமே பணம் செலுத்த முடியும் என தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்தனர். ஆனால் தொலை தொடர்பு  மட்டுமல்லாது பிற சேவைகளுக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டுமென தொலை தொடர்பு அமைச்சகம் தெரிவித்தால் இந்த வழக்கு நீதிமன்றம் சென்றது.

15 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 24ம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில் தொலை தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஜனவரி 24ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  தொலைதொடர்பு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய அபராதத் தொகையை உடனடியாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தொலை தொடர்பு துறை அதிகாரி  தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டாம் என்றும் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டாம் என்றும் சுற்றறிக்கை அனுப்ப, பிரச்னை பூதாகரமானது. இந்த விவகாரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில மணி நேரங்களில் அந்த சுற்றறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் குறிப்பிட்ட அதிகாரியை கைது செய்ய ஆணையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

அப்போது, ‘சுப்ரீம் கோர்ட்டை மூடுங்கள். இந்த நாட்டில் எந்த சட்டமும் இல்லை. நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம். இந்த அமைப்பில் நான் வேலை செய்யக்கூடாது என்று உணர்கிறேன். தொலை தொடர்பு துறையின் சாதாரண அதிகாரிக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் படி செயல்பட வேண்டாம் என கடிதம் எழுதும் துணிச்சல் எப்படி வந்தது? அந்த அதிகாரி தன்னை சுப்ரீம் கோர்ட்டு என்று கருதுகிறாரா?- என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா பேச, தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிர்ந்தன. இந்த எச்சரிக்கையையடுத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் அபராதத் தொகையை நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டுமென்று மத்திய அரசும் உத்தரவிட்டது,

இதையடுத்து அதிகபட்ச கடன் வைத்துள்ள ஏர்டெல் நிறுவனமும் வோடபோன் நிறுவனமும் முறையே தலா 10 ஆயிரம் மற்றும் 2500 கோடி ரூபாயை முதற்கட்டமாக அளித்தன. மீதமுள்ள தொகையை விரைவில் அளிக்க ஒப்புக் கொண்டன.

ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்புவரை இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகையே 23 ஆயிரத்து 189 கோடி ரூபாய் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று ஆண்டு தோறும் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தாமல் விட்டதன் விளைவாக 63 சதவீத வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு இவ்வளவு பெரிய தொகையில் வந்து நிற்கிறது.

இந்நிலையில் மார்ச் 17ம் தேதிக்கு முன்னதாக முழுத் தொகையையும் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இலட்சம் கோடி கடனில் இயங்கி வரும் இந்நிறுவனங்கள் இத்தொகையை செலுத்த முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றன. குறுகிய காலத்தில் முழுத் தொகையையும் செலுத்த வலியுறுத்தினால் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும் என வோடோஃபோன் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ள நிலுவைத் தொகை மத்திய அரசு குறிப்பிட்டுள்ள நிலுவைத் தொகையிலிருந்து வேறுபடுகிறது. உதாரணமாக வோடபோன் நிறுவனம் 55 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை செலுத்த வேண்டுமென்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 23 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிலுவைத் தொகை உள்ளதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் டாடா டெலிசர்விஸ் நிறுவனமானது 14 ஆயிரம் கோடி ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2 ஆயிரத்து 197 கோடி ரூபாய் மட்டுமே நிலுவை உள்ளதாக அந்நிறுவனமும் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் 3வது நபரை வைத்து அபராதத் தொகை மதிப்பீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த இக்கட்டான நிலையில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் தலைமை நிர்வாக அதிகாரிகள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மார்ச் 17ம் தேதிக்குள் முழு நிலுவைத் தொகையை செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனமும் உத்தரவாதம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் வழியை இந்த நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ளன.

Exit mobile version