வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்துள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
புயலுக்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – காக்கிநாடா இடையே வரும் 17 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
இதன் காரணமாக தமிழக வட கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று 45 லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.