காற்று மாசைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க 3 மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
டெல்லியிலும் அண்டை மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அது பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைக்கோலை எரிப்பதும் புகை மூட்டம் சூழ்வதும் ஆண்டுதோறும் வாடிக்கையாக நடந்து வருவதாகவும், இத்தகைய சூழ்நிலைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாழ்வதற்கான உரிமை மிக முதன்மையானது என்றும், டெல்லியில் வீட்டுக்குள் கூடப் பாதுகாப்பாக வாழ முடியவில்லை என்றும், காற்று மாசுபாட்டால் மக்களின் வாழ்நாள் குறைந்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். காற்று மாசைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வைக்கோலை எரிப்பதைத் தடுக்கத் தவறிய ஊராட்சித் தலைவர், அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர். மாசுபாடு குறித்து விவரம் அறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஐஐடி ஆகியவற்றின் வல்லுநர்களில் ஒருவரை அழைத்துவருமாறு கூறி விசாரணையை அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.