கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் நூறு விழுக்காடு பங்குகளும் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அரசுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் 55ஆயிரம் கோடி ரூபாய் கடன்சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்குக் கடந்த நிதியாண்டில் நாலாயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருளுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தாததால் ராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே, கொச்சி விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை இந்தியன் எண்ணெய் நிறுவனம் நிறுத்திவிட்டது. ஏர் இந்தியா பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மாதம் முந்நூறு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
கடந்த அக்டோபரில் இருந்து ஊதியம் வழங்கத் தேவையான வருமானம் இல்லாததால் ஒரு சில சொத்துக்களை விற்று ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் 76 விழுக்காடு பங்குகளை மட்டும் விற்க அரசு முடிவு செய்து விருப்பம் தெரிவிப்போரிடம் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. அதை வாங்க யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் அடுத்த வாரம் கூடஉள்ள அமைச்சரவையில் ஏர் இந்தியாவின் நூறு விழுக்காடு பங்குகளை விற்க முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.