ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

நாட்டின் விலை மதிப்பற்ற அணிகலனான ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க வேண்டாம் எனக் கோரித் தொழிற்சங்கங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளன.

அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா 50ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் மூழ்கியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக நட்டத்தையும் சந்தித்து வருகிறது. இந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே ஆண்டுக்கு 4ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனப் பங்குகள் முழுவதையும் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதற்கான பணிகளைத் தொடங்கி மார்ச் 31ஆம் தேதிக்குள் விற்பனை நடவடிக்கைகள் முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் விமான ஓட்டிகள், பல்வேறு பிரிவு பணியாளர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில் நாட்டின் விலை மதிப்பற்ற அணிகலனான ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர். இதே கடிதத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.

Exit mobile version