நான்கரை ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத் துறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுள்ளதை, அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும், தேவையான நிதி ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் மற்றும் எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இன்று அவர் அளித்த பதில் மனுவில் எய்ம்ஸ்க்கான திட்ட மதிப்பீடு, நிதிக்குழு ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின் 45 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என அதில் கூறியுள்ளார்.