மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள் என்ன தெரியுமா?

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்புகள்

 இந்தியாவில் 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. கூடுதலாக 12 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக தமிழ்நாடு, தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. இது, தெலங்கானா மாநிலத்திற்கு ஒதுக்கிய நிதியை விட 236 கோடி ரூபாய் அதிகமாக உள்ளது.

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், 100 எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடங்களும், 60 பி.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கான இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இது, தமிழகத்தில் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும்.

பல்நோக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 15 முதல் 20 புதிய துறைகள் இடம் பெற உள்ளன. மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதால், இதன் மூலம் அதிக உள்நோயாளிகள் பயன்பெற முடியும் என கூறப்படுகிறது.

இந்த மருத்துவமனை அமைவதன் மூலமாக, நாள்தோறும் ஆயிரத்து 500 புறநோயாளிகளும், மாதத்திற்கு ஆயிரம் உள்நோயாளிகளும் பயன்பெற முடியும்.மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், மருத்துவர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட பல வசதிகளோடு கட்டப்படவுள்ளது இந்த எய்ம்ஸ் மருத்துவ வளாகம். இது முழுவதுமாக முடிவடைய 45 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version