அதிமுக அரசு எக்காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்ற போதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்களிடம் அவர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என்று வதந்திகளைத் தொடர்ந்து பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முற்றிலும் தவறான இந்தப் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.குடியுரிமை மசோதாவின் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதும், இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம், தானும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தவறான பிரசாரங்களுக்குச் செவி சாய்க்காமல் அமைதி காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தில், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.