தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மத்திய அரசுக்கு எப்போதும் துணை நிற்கும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனா இடையே அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், அஇஅதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், இது மிகவும் சரியான, அவசியமான கூட்டம் எனவும், நாட்டின் எல்லைகளையும், தேசத்தையும் பாதுகாக்க நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க அனைவருக்கும் கிடைத்த வாய்ப்பு என்றும் கூறினார். லடாக் எல்லை பகுதியில் தேசத்துக்காக போராடும்போது, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான 20 இந்திய வீரர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். கொரோனா வைரசை எதிர்கொண்டுள்ள கடினமான நேரத்தில் நாட்டினை அமைதியாக வழிநடத்தும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில் பிரதமர், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு பின்னால் தமிழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் உறுதியாக நிற்கும் எனவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார். எல்லைப்பகுதியில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.