பெண்ணையாறு, காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அதிமுக வரவேற்பு

பெண்ணையாறு – காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைக்கும் திட்டத்தை அண்ணா திமுக வரவேற்பதாகவும், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நோய்தொற்றை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நேரத்தில் பிரதமர் மோடி தீர்க்கமான முடிவு எடுத்தார் என்றும் அதற்கு முந்தைய அதிமுக அரசு போதிய ஒத்துழைப்பு அளித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால மருத்துவ பேரிடரை சமாளிக்க தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 64 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதிப்பின்போது 8 கோடி தமிழர்களின் உயிர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காப்பாற்றியதாகவும், கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு முந்தைய அதிமுக அரசு ஐந்தாயிரத்து 500 ரூபாய் ரொக்கம்,

இலவச உணவு தானியங்கள் மற்றும் அம்மா உணவகம் மூலம் ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டதாகவும் தம்பிதுரை சுட்டிக்காட்டினார். பெண்ணையாறு – காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைக்கும் திட்டத்தை அதிமுக வரவேற்பதாக அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது, கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது தொடர் கதையாகிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version