மத்திய புதிய வேளாண் சட்டங்களின் சாதக பாதகங்களை ஆராயாமல், அதனை எதிர்த்து திமுக அரசு தீர்மானத்தை கொண்டு வந்ததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவையில் புதிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன், இந்த தீர்மானத்தை அவசர கோலத்தில் தீர்மானம் கொண்டு வராமல், அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவசாயிகளின் கருத்தையும் பெற்று சட்டத்தை திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், புதிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு மீதான தீர்மான விவாதத்தில் பேசிய முதலமைச்சர், அதன் சாதகங்களை பேசாமல், பாதகங்களை மட்டும் பேசியதாக விமர்சித்தார்.
விவசாயிகள் நலன் பாதுகாக்க வேண்டும் என்பது அனைவருடைய ஒருமித்த கருத்து என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், விவாசயி நலன் கருதி அரசு எடுக்கும் முடிவிற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த சாதக பாதங்களை மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தெரிந்த பின் இந்த தீர்மாத்தை கொண்டு வரும் முடிவை எடுக்கலாம் என்று கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் தீர்ப்பு வரும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
பிரதமரிடமோ, மத்திய அமைச்சரிடமோ கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதையும் மீறி, அரசு தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.