2021 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் வரலாற்று சாதனை படைக்க வீர சபதம் ஏற்போம் என்று அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதிமுக ஏழைகளை காக்கும் இரும்பு கோட்டை என்றும், இயக்கத்தை தந்த புரட்சித் தலைவரின் புகழை எந்நாளும் காப்போம் என அவர்கள் உறுதி ஏற்றனர்.
அம்மாவின் விசுவாச தொண்டர்களின் விவேகத்திற்கு முன்னால் எதிரிகள் யார் வந்தாலும், அவர்களின் திட்டங்கள் பலிக்காது என்றும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் புகழ் மகுடத்தை எதிரிகள் யாரும் தட்டிப்பறிக்க முடியாது; பறிக்கவும் விடமாட்டோம் எனவும் முழங்கினர்.
வெட்டி வா என்றால், கட்டி வரும் கடமை வீரர்களாகிய கழக உடன்பிறப்புகள் சிங்கமென தேர்தல் களத்தில் சீறிப்பாய்வோம் என்றும், சிறு நரிகளை மிரண்டு ஓட செய்து, எதிரிகளின் பொய் முகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
எதிலும் வெற்றி என்று முழங்குவோம், அதற்காகவே உழைத்திடுவோம் என்றும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் வரலாற்று சாதனை படைக்க வீர சபதம் ஏற்றனர்.
எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி, புரட்சித் தலைவி அம்மாவின் நேர்மையான ஆட்சி மீண்டும் தொடர பாடுபடுவோம் என்றும், மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என்றும் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.