"மூடாதே மூடாதே ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை மூடாதே" – தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

விழுப்புரம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்கும் சட்டமுன் வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்கட்சித்துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணியில், கஸ்தூரிபாய் மருத்துவமனை அருகே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி அசோக், ஆதிராஜராம் தலைமையில், அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். பின்னர், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

 

திருச்சி தென்னூர் சாலையில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில், நடைபெற்ற போராட்டத்தில், திமுக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை திமுக அரசு முடக்கியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துக் கொண்டனர். அப்போது திமுக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி கனவை திமுக அரசு முடக்குவதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுச்சேரி காமராஜர் சாலையில், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Exit mobile version