அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கூறும் கருத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அதிமுக தலைமைக் கழகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அதிமுக தலைமையகம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் அங்கீகரிக்கப்பட்ட 17 செய்தித் தொடர்பாளர்களைத் தவிர, அங்கீகாரம் பெறாதவர்களை ஊடகங்கள் அழைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழைக்கப்படுபவர்களை அதிமுகவின் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து ஊடகங்களுக்கும் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அதிமுக சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயினும், அண்மையில் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், அதிமுகவுக்குத் தொடர்பு இல்லாத வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரை கழகத்தின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அங்கீகாரம் அற்றவர்களை அதிமுகவுடன் இணைத்து அடையாளப்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெளிவுபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.