வாணியம்பாடி சமூக ஆர்வலர் படுகொலை, நீட் பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை, உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தணுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக மாணவர்களை ஏமாற்றிய திமுக அரசை சண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரவைக்குள் சென்றனர்.
தொடர்ந்து வாணியம்பாடி படுகொலை, மாணவன் தற்கொலை விவகாரம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மாணம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டத்தில் தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுகவினர் தொடர்ந்து தெரிவித்து வந்ததால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கையில், அவரை மேலும் பேச அனுமதி மறுத்து மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் திமுக அரசை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.