அதிமுக சார்பில் முதற்கட்டமாக 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல்!

அதிமுக சார்பில் முதற்கட்டமாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு, பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதி மறு சீரமைப்பில் பெரியகுளம் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டவுடன், 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 3ஆவது முறையாக போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்குகிறார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1989ஆம் ஆண்டு முதன்முதலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அதன்பிறகு 1991 ஆம் ஆண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 7வது முறையாக போட்டியிடுகிறார். 1991, 2001, 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் வெற்றிபெற்று சி.வி.சண்முகம் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதி மறுசீரமைப்பில் திண்டிவனம் தொகுதி தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மீண்டும் அதே தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற எஸ்.பி.சண்முகநாதன், தற்போது 5வது முறையாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதி வேட்பாளராக தேன்மொழி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு முதல்முறையாக தேர்வு செய்யபட்ட தேன்மொழி, அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பெற்றி பெற்றார். இந்நிலையில், அதே தொகுதியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக நிலக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version