ஆசிய தடகள போட்டிகளில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கும், வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கும் முறையே 15 லட்சம் ரூபாய் மற்றும் 10 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கும், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பயந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு இதயமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு மேலும் பல வெற்றிகளை பெற்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று மனதார வாழ்த்திய அவர்கள், இருவரையும் ஊக்குவிக்கும் விதமாக அதிமுக சார்பில் கோமதி மாரித்துவுக்கு 15 லட்சம் ரூபாயும், ஆரோக்கிய ராஜீவுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.