"திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள்"

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க தவறியது, வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு, அண்ணா திமுக செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில், பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு கொடுத்து ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்துள்ள திமுகவின் நேர்மையற்ற பிரசார முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும்; வாக்குறுதிகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த அட்டவணையை திமுக வெளியிடாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்ற செயல்கள், பாதுகாப்பற்ற நிலை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க முன்வர வேண்டும் என்றும்;சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்திருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடகிழக்கு பருவமழையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்; மழை, வெள்ள பாதிப்புகளை முன்னேற்பாடுகள் மூலம் தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும்.

மழை, வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களின் துயர் துடைக்க திமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடந்து முடிந்து 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு, முறைகேடுகள் மூலம் வென்ற திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version