தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் 2வது நாளாக தொடர்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கழக அலுவலகங்களிலேயே அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் நேற்று தொடங்கியது.
இரண்டாவது நாளாக, மாவட்ட கழக அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆண்டார்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் விருப்ப மனுக்களை வழங்கினார். பொன்னேரி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.