புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வைத்திலிங்கத்திற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார்.
அவரது பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 90 ஆயிரத்து 63 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரை வீழ்த்தினார்.
இதேபோன்று கடந்த ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2026ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி, 94 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் முருகனை தோற்கடித்தார்.
இருவரும் நாளை சட்டமன்ற உறுப்பினகளாக பதவியேற்க உள்ள நிலையில், தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஏற்கனவே அதிமுக மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு மாநிலங்களவை எம்.பி., இடங்கள் காலியாகி உள்ளது.
34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய முடியும் என்ற நிலையில், திமுக கூட்டணியில் 159 உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் 75 உறுப்பினர்கள் உள்ளனர்.
காலியான மாநிலங்களவை இடங்களை நிரப்ப 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது