அதிமுக மாவட்ட கழகங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு, அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக விளங்குகிறது. இந்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா, அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பை அபகரிக்கும் நோக்கில், தொண்டர்களிடம் பேசுவதாக நாடகம் அரங்கேற்றி வருகிறார். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாக, இந்த தீர்மானத்தை ஆதரித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக மாவட்ட கழகங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த கட்சி நிர்வாகிகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

 

இதேபோல், விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், சசிகலாவுக்கு எதிராக அதிமுக தலைமை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து, மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்தை வாசித்தார்.

 

அப்போது, சசிகலா மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் அதிமுக தொண்டர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. பின்னர், நிர்வாகிகளின் பேராதரவோடு இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

 

சென்னை ராயபுரத்தில், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத சசிகலா, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் டி-கல்லுப்பட்டியிலுள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமை நடைபெற்ற கூட்டத்தில், அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரையும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

திருச்சியில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில், சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version