மதுரையில் நாளை பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ள பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு, லட்சக்கணக்கான கழக தொண்டர்கள் சாரைசாரையாக வர தொடங்கியுள்ள நிலையில், அங்கு என்னென்ன சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…
மதுரை வலையங்குளத்தில் 5 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில், அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளை தொலைவிலிருந்து காணும் வகையில், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மேடையில் பிரமாண்டமான ‘டிஜிட்டல்’ திரை அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு வழங்க சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர், பாத்திரம் சுத்தம் செய்வோர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். டேபிள் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடும் வகையில், 3 இடங்களில் 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டுகளில் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளிலும் எல்.இ.டி. திரைகளில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருவோர் நான்கு திசைகளிலும் இருந்து பந்தலுக்குள் எந்தவித சிரமும் இன்றி வருவதற்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 300 ஏக்கரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு குடிநீர் வழங்க 10 லட்சம் குடிநீர் பாட்டில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி பந்தல் அருகே மொபைல் கழிப்பறைகளும், ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக தலைமைச்செயலகம், கழக தலைமைக் கழகமான புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை, அம்மா பசுமை வீடு, அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் போன்றவை மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டையொட்டி நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில், கழக வரலாறு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திரைப்படம், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன. நாளை காலை 8 மணிக்கு வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்கிறார். அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர். காலையிலிருந்து மாலை வரை கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், தமிழகத்தின் பாரம்பரிய பண்பாடு சார்ந்த பல்வேறு கலை நிகழ்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலையில் கழகத்தின் காவலரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கவுரவிக்கிறார். அதிமுவின் எழுச்சி மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கழக நிர்வாகிகள் ரயில் மூலமாகவும், பேருந்து, வேன் மற்றும் கார் மூலமாகவும் சாரைசாரையாக வர தொடங்கியுள்ளதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Discussion about this post