சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால், பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை, காலை கூடியதும், மக்கள் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேச அனுமதி கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்பட்டார். அவருக்கு அனுமதி வழங்கப்படாததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை, திமுக ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார். ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை என அவர் சாடினார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என விடியா அரசு மாணவர்களை குழப்பிவிட்டதாக விமர்சித்தார்.

 

 

சுய விளம்பரம் தேடும் முயற்சியாக திமுக நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பாழனிசாமி குற்றம்சாட்டினார்.

 

பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உண்மைக்குப் புறம்பாக வழக்குகளைப் போட்டு பழிவாங்கும் எண்ணத்துடன் திமுக அரசு செயல்படுவதாக சாடினார்.

மூச்சுக்கு 300 தடவை பத்திரிகை சுதந்திரத்தை பற்றி ஸ்டாலின் பேசி வரும் நிலையில், நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் அத்துமீறியதற்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்தார். பத்திரிகை சுதந்திரத்தை திமுக அரசு காலில் போட்டு நசுக்கி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

 

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலடி கொடுப்பேன் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 

Exit mobile version