அரசியல் காழ்ப்புணர்ச்சியால், அதிமுகவினர் மீது திமுகவினர் போடும் பொய் வழக்குகளை எதிர்கொள்ள, சட்ட ஆலோசனைக் குழுவை நியமனம் செய்து அஇஅதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு அஇஅதிமுக-வினர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மக்கள் மற்றும் கட்சிப் பணிகளில் அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கழகத்தை சேர்ந்த அனைவருக்கும் அஇஅதிமுக எப்போதும் பாதுகாப்பு அரணாக திகழும் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில், ‘அஇஅதிமுக சட்ட ஆலோசனைக் குழு’ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி நியமிக்கப்பட்ட குழுவில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கழக அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் இன்பதுரை, கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஆகியோரும் சட்ட ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பொய் வழக்குகளை எதிர்கொள்ளும் கழகத்தை சேர்ந்தவர்களுக்கு இக்குழு அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும் என்று கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.