அடுக்கடுக்கான திட்டங்களை அதிமுக அரசு திறம்பட செயல்படுத்துகிறது: முதல்வர் பழனிசாமி

கிருஷ்ணகிரியில், 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போலுப்பள்ளியில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பங்கேற்று மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினர்.

புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். கிருஷ்ணகிரியில் ரோஜா, மல்லிகை, சாமந்தி மலர்கள் அதிகம் உற்பத்தியாகும் மாவட்டம் என்பதால், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு  அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் வளமுடனும், அமைதியுடனும் வாழும் வகையில் அதிமுக அரசு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார். சிலர் தானும் குழம்பி மக்களையும் குழப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

இந்த நிகழ்ச்சியில், பசுமை வீடுகள், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம், மானியத்துடன் கூடிய டிராக்டர் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஏழை-எளிய மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் நினைவுப் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version