திமுக அரசின் பொய்யான வாக்கூறுதியை நம்பி, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளில் ஒன்றான நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி, மேல்நிலை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், இந்த அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற இயலாத அரசாக உள்ளதை நாள்தோறும் எண்ணி, மனம் நொந்து, மாணவர் தனுஷ் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
மாணவர் தனுஷின் மரணத்துக்கு, திமுகவும் அதன் அரசும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவுடன், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மாணவர் தனுஷ் மரணத்திற்கு எதை கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்ற எண்ணம் இருந்தபோதிலும், சிறிய உதவியாக அஇஅதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
எந்த துயரம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளை தாண்டி புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் பீடுநடைபோட்டு வெற்றி பெற வேண்டும் என்ற போராட்ட குணத்தை மாணவ செல்வங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறுவுறுத்தியுள்ளனர்.
மாணவர் தனுஷின் மரணத்துக்கு அஇஅதிமுக சார்பில் இரங்கலையும், அனுதாபத்தையும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளனர்.