நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில், அண்ணா திமுக விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவினர் எழுச்சியுடன் விருப்ப மனுக்களை வாங்கிச் செல்வதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அண்ணா திமுக மகத்தான வெற்றியினை பெறும் என்றும் கூறினார். மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், சுதந்திரமாக செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கோட் போடுவது, இன்ஸ்பெக்சன் போவது, டீ சாப்பிடுவது என்று சினிமா போல் ரிப்பீட்டேஷன் செய்கிறாரே தவிர இதனால் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க திமுக அரசு தவறி விட்டதாக சாடினார். பேரிடர் மேலாண்மையை கையாள்வதில் திமுக அரசு தவறி விட்டதால், தமிழ்நாட்டை மழை, வெள்ளத்தில் இருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கூறினார்.
Discussion about this post