கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாகவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சக்திவேல், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சக்திவேலின் மனைவி ஜோதி-க்கு அதிமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
மேலும்,10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களையும் வழங்கினார். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓமலூர் எம்எல்ஏ மணி, நல்லாக்கவுண்டன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அனல்மின் நிலைய தேசிய முற்போக்கு தொழிற்சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இணை ஒருங்கிணைப்பாளர், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அவர்களை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேட்டூர் அனல்மின் நிலைய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.