அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி சான்றிதழ் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்திருந்தால், அரசுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் என்றும் அந்த வருவாயை இனியும் இழக்காமல், மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசின் வணிக வரித் துறை, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு வழங்கியதாக வெளியான செய்தியை குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாகவும், இடமாற்று சான்றிதழ் கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் கட்டணம், மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக பட்டச் சான்றிதழ் ஆகியவை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்குமாறு சுற்றறிக்கையில் உத்தரவிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சான்றிதழுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணமாக இருந்ததால், அதற்கு 180 ரூபாயை ஜிஎஸ்டி வரி கட்டணமாக மாணவர்கள் கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி, மாணவர்களின் பெற்றோர் தலையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.