சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வதில் அஇஅதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் தேர்தல் வியூகம், தேர்தலுக்கான பணிகள், பிற கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.