"அதிமுக நெருப்பிலே பூத்த மலர், ஊதி விளையாட நுரை பூ அல்ல"

அதிமுக நெருப்பிலே பூத்த மலர், ஊதி விளையாட நுரை பூ அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் பல சோதனைகளையும், இன்னல்களையும், தியாகங்களையும் சந்தித்தே அதிமுக-வை கட்டிக்காத்து மாபெரும் இயக்கமாக வளர்த்துள்ளதை நினைவுகூர்ந்துள்ளனர்.

அந்த வகையில், கழகத்தையும், தொண்டர்களையும், நாளும் பொழுதும் கண்ணெனக் காத்து வருவதாகவும், தொடர்ந்து தொய்வில்லாமல் மக்கள் பணி ஆற்றி வருவதாகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தி.மு.க.வின் இயற்கை குணாதிசயங்கள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது.

10 ஆண்டு காலமாக தலைகாட்டாத மின்வெட்டு தற்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

கூச்சமோ, அச்சமோ இன்றி, வெட்ட வெளிகளிலும், வீதிகளிலும், பட்டப் பகலில் சட்டவிரோதச் செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபடுகின்றனர் என தி.மு.க. ஆட்சியில் உள்ள அவலங்களை பட்டியலிட்டுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் சுதந்திரமாக பணிசெய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினரின் தலையீடும், உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும், ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில் வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பெற்ற ஆட்சியாக தி.மு.க. ஆட்சி தனது இருப்பையும் இயல்பையும் காட்டிக்கொள்வதாவும் விமர்சித்துள்ளனர்.

ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக் கூடிய கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் தி.மு.க.வினர் தங்கள் முழு வரம்பு மீறலை வெளிப்படுத்தி வருவதாகவும், ஆளும் கட்சியினரின் தவறுகளையும், தலையீடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அடிப்படை அரசியல் கடமையில் ஈடுபட்டுள்ள அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதலை தி.மு.க.வினர் ஏவிவிடுவதாகவும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குற்றம்சாட்டியுள்ளனர்.

காவல்துறையினர் உதவியுடன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களையும், பொய் வழக்குகளையும் போடும் செயல்களை அரங்கேற்றி வரும் தி.மு.க.வினரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆற்றவேண்டிய பணிகள் ஆயிரம் இருக்கையில், அராஜகத்திற்கு துணைபோகும் செயலில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து ஈடுபடுவது மக்களுக்கு செய்யும் துரோகம் என விமர்சித்துள்ளனர்.

அதிமுக-வினர் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவதும்; அநீதிகளையும், அராஜகங்களையும், ஆட்சியின் அலங்கோலங்களையும் தட்டிக் கேட்கும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது பொய் வழக்கு போடுவதும், தாக்குதல் நடத்துவதுமான செயல்களை தி.மு.க. தலைமை தலையிட்டு நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்படக்கூடிய தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துபேசி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

எந்தச் சூழ்நிலையிலும் எதிர்த்துக் களமாடுவதற்கு கழக வழக்கறிஞர் பிரிவு தயார் நிலையில் இருப்பதாகவும், அதனை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கழக வழக்கறிஞர் பிரிவு, எதிர்க்கட்சி என்ற பிரதான வாய்ப்பை பயன்படுத்தி சட்ட நெருக்கடியை தி.மு.க.வுக்கும், அதன் அரசுக்கும் தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதிமுக புதுவெள்ளத்தில் மிதந்துவரும் நுரை பூ அல்ல ஊதி விளையாட. தொண்டர்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலர் என எச்சரித்துள்ளனர். எந்த அச்சுறுத்தலும் அதிமுகவை நெருங்க முடியாது.

அமைதியாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் ஜனநாயகக் கடமையாற்றி வரும் கழகத்தினரையும், பல்வேறு அணியினரையும், தகவல் தொழில்நுட்பப் பிரிவினரையும் அச்சுறுத்துவதால் கழகம் அடங்கிப் போகும் என தப்புக் கணக்கு போடாமல், தலைகால் தெரியாமல் ஆட்டம் போடாமல் நல்லாட்சி நடத்திவதில் கருத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமை தி.மு.க.வுக்கு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version