அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் அடங்கிய அ.தி.மு.க. புகார் பெறும் கமிட்டியை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் தலைமையகத்தில் துவக்கி வைத்தனர்.
அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி குறித்த புகார்கள் மற்றும் கோரிக்கைகளை பெறும் வகையில் அ.தி.மு.க. புகார் பெறும் கமிட்டி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. புகார் பெறும் கமிட்டியை இன்று துவக்கி வைத்தனர்.
இந்த கமிட்டியில் தமிழக அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த கமிட்டி மூலம் பெறப்படும் தொண்டர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை உடனடியாக அ.தி.மு.க. தலைமையின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.