நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

பஞ்சுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும், ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய மாநில அரசுகளுக்கு வருவாயை ஈட்டித்தரும் ஜவுளித்தொழில், கடும் நூல் விலை உயர்வு காரணமாக மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நூல் விலை உயர்வு காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத் தொழிலே முடங்கும் நிலைக்கு வந்துவிட்டதாக செய்திகள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பஞ்சு விலை ஏற்றத்தால் நூலின் விலை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர், உள்ளூரில் பஞ்சுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது வெளிநாடுகளில் இருந்து முன்பு இறக்குமதி செய்ததாகவும், கடந்த ஆண்டில் இறக்குமதி பஞ்சுக்கு 11 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளதால், இறக்குமதி அளவு குறைந்து உள்ளூரில் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இறக்குமதி வரி காரணமாக சர்வதேச விலையை விட இந்திய விலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜவுளித்தொழில் சந்திக்கும் பிரச்னைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி, இறக்குமதி பஞ்சுக்கான வரியை நீக்கவும், ஏற்றுமதியை தடை செய்யவும் மாநில அரசு தேவையான அழுத்தத்தை அளித்து, ஜவுளித்தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version