அகவிலைப்படியை உயர்த்த தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததை பின்பற்றி தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை நிறுத்தி வைத்தாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு உத்தவிட்டுள்ள நிலையில்,

இதனை பின்பற்றி பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட உள்ள சூழ்நிலையில், நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, கடன் என பட்டியலிட்டு தமிழக நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருப்பதை பார்க்கும்போது, தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ என்ற அச்சத்தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில், தங்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாடு அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி மத்திய அரசின் அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி,

அதனை 2021 ஜூலை ஒன்றாம் தேதி முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version