சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
சென்னையில் டிசம்பர் 30ம் தேதி இடைவிடாமல் பெய்த மழையால் அனைத்து சாலைகளும் ஆறு போல் காட்சியளித்தது என்றும், பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் உடைமைகள் சேதம் அடைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியதை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விலைவாசி பன் மடங்கு உயர்ந்திருப்பதை கருத்தில் கொண்டு ஒருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், இரண்டு முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்க வேண்டும் என்றும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.