எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மலர்தூவி மரியாதை!

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களும் புரட்சித் தலைவருக்கு மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவரின் உருவப்படத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கருப்பு சட்டை அணிந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவரின் உருவப்படத்திற்கு, இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை அணிந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

Exit mobile version