பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாட அதிமுக தலைமை தீர்மானம்

பிரமாண்டமான மாநாட்டை நடத்தி பொன்விழாவை கொண்டாட தீர்மானித்து இருக்கும் அஇஅதிமுக தலைமை, கட்சியின் முன்னோடிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை வழங்கி கவுரவிக்க முடிவு செய்து இருக்கிறது.

பொன்விழா கொண்டாட்டம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், அதிமுக தொடங்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு விழாவை, ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும் வகையில், பிரமாண்ட மாநாடு நடத்தில் சிறப்பு இலச்சினை வெளியிடவும் தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை கழக முன்னோடிகளுக்கு அணிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிமுக வளர்ச்சிக்காகத் தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினர் உள்ளிட்டோருக்கு இந்த பொன்விழா ஆண்டு முதல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி, கெளரவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, பொன்விழா மாநாட்டில் சான்றிதழும், பரிசும் வழங்கி சிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமைக் கழகத்திற்கு “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை” என பெயர் சூட்டவும், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா மற்றும் அதிமுக பற்றி நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கெளரவிக்கவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

மேலும், வாரிசு அரசியல், மதம் மற்றும் ஜாதி அரசியல், மனிதர்களைப் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியல் என்ற சிறுமைச் சிந்தனைகள் ஏதும் இன்றி, எல்லோருக்கும் எல்லாமாகத் திகழ, தோற்றுவிக்கப்பட்டது என அதிமுக என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் செயற்கரிய சாதனைகளை அதிமுக செய்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பொன்விழா ஆண்டில் அதிமுக ஆட்சி மிண்டும் மலர்ந்து, மக்கள் துன்பங்கள் யாவும் அகன்று, வளர்ச்சிப் பாதையில் அமைதியான தமிழ்நாடு உருவாகிட, தொண்டர்கள் சூளுரைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version