கிறிஸ்தவப் பெருமக்கள் புனிதயாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், பேராயர், ஆயர், போதகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்துமஸ் கேக் பகிர்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கேக் வெட்டி பகிர்ந்தளித்தனர்.
கிறிஸ்தவப் பெருமக்கள் புனிதயாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகை, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார். விழாவில் முன்னாள் எம்.பி.யான, ரபிபெர்னாட் விடுத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று தெரிவித்த முதலமைச்சர், கொள்கைதான் என்றும் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டார். கொள்கையின்படிதான் அதிமுக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மதச்சார்பின்மை, ஏழை-எளியோருக்காக உழைப்பது, சமத்துவ சமதர்ம சமுதாயம் காண பாடுபடுவது போன்ற உயர்ந்த லட்சியங்களை உறுதியாக கடைபிடிப்போம் என தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை கருணை இல்லம் மற்றும் லிட்டில் சிஸ்டர்ஸ் ஆஃப் த பூவர் ஆகிய அமைப்புகளுக்கு அதிமுக சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உதவிப் பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேராயர், ஆயர், போதகர் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர்.