அக்டோபர் 17-ம் தேதி அஇஅதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நடந்த தீய சக்தியின் ஆட்சியை அகற்றி, தர்மத்தை நிலைநாட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றும்,
இந்த பேரியக்கம் 49 ஆண்டுகளைக் கடந்து, வரும் 17-ம் தேதி பொன்விழா காணவிருக்கும் திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக, மாவட்டக் கழகங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அளவிலான இடங்களில், கழக கொடிகளை கம்பீரமாக பட்டொளி வீசி பறக்கச் செய்ய வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அதிமுக தலைமை,
கழகத்தின் பொன்விழா தொடக்க நிகழ்ச்சிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.