விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யக் கூட்டணிக் கட்சிகளோடு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, பிரபு, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.