அஇஅதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, விருப்ப மனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு தலைமை அலுவலகத்தில் இன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.
வருகிற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அஇஅதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனுக்கள், புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. தினந்தோறும் ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்ற நிலையில், இறுதி நாளில் ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டது. விருப்ப மனுக்களை பெறுவதற்காக ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்தனர். இதனால் வழக்கமாக 10 மணிக்கு துவங்கும் பணிகள், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக காலை 8 மணிக்கே துவங்கியது. மாலை 5 மணிவரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. 8 நாட்களாக நடைபெற்ற விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு வழங்கியுள்ளனர்.
விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது. அதேபோல, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்களுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
பிற்பகல் 3 மணி முதல் கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, கேரளா மாநில தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.