திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட ஆட்சி மன்றக்குழு கூடி, வேட்பாளரை தேர்வு செய்ய நேர்க்காணல் நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, எந்தவொரு தேர்தலையும் கண்டு பின்வாங்கும் இயக்கம் அதிமுக அல்ல என்று குறிப்பிட்டார். தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி, அவரது மறைவுக்கு பின் காலியானது. அங்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.