கோவையில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில், அதனை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னையை பின்னுக்குத் தள்ளி, கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
அரசின் அலட்சியத்தால், கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றம் கூட்டணி எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாததால், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்ட மக்கள் பீதியில் உள்ளதாகவும், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன், முன்னாள் துணை சாபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் கே. அர்ஜுனன், சிங்கநல்லூர் எம்எல்ஏ ஜெயராம், சூளூர் எம்எல்ஏ வி.பி.கந்தசாமி கிணத்துக்கடவு எம்எல்ஏ தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி மற்றும் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.