கொரோனா சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டுவதாக அதிமுக குற்றம் சாட்டி இருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், அய்யப்பன் ஆகியோர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
கொரோனா பாதிப்பு குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு வெளியிட்டு வருவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் பின் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் போது கையாண்ட நடவடிக்கைகளை பின்பற்றுமாறு, ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதிலும், தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதிலும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.
அதன் பின் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, கொரோனா முகாம்களை தொடர்ந்து நடைமுறைபடுத்துவதில் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.