நடந்து முடிந்துள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இன்று பதவியேற்றனர்.
ஏப்ரல் மாதம் 18ம் தேதி மற்றும் கடந்த 19ம் தேதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அரூர், நிலக்கோட்டை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன்மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 123ஆக அதிகரித்துள்ளது.
அரூர் தொகுதியில் இருந்து வி. சம்பத்குமார், நிலக்கோட்டையில் தேன்மொழி, மானாமதுரையில் எஸ். நாகராஜன், பாப்பிரெட்டிபட்டியில் ஏ. கோவிந்தசாமி, பரமக்குடியில் என். சதன் பிரபாகரன், சாத்தூரில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சோளிங்கர் தொகுதியில் ஜி.சம்பத், சூலூரில் பி.கந்தசாமி, விளாத்திகுளத்தில் பி. சின்னப்பன் ஆகியோர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் 9 பேரும் எம்.எல்.ஏக்களாக இன்று பதவியேற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 9 எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர்.