3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாகஅறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பிரதமருக்கு நன்றி தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்காகவும், குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் தனது நன்றிகளை பிரதமர் நரேந்திரமோடிக்கு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதேபோன்று, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையையும், விவசாயிகளின் மேல் அவருக்கு உள்ள அக்கறையையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதற்காக அண்ணா திமுக சார்பில் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.