கோடை கால வெயிலில் வெளியில் செல்லவே தயங்கும் சூழலில் வரும் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் எனப்படும் “அக்னி நட்சத்திரம்” தொடங்குகிறது, இந்த கோடைகால வெயிலில் இருந்து எப்படி நம் உடல் நலத்தை பாதுகாப்பது என்பதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பை காணலாம்.
“சித்திரை மாதம் கத்திரி வெயில்” என்று சொன்னாலே பலரும் பயப்படும் நிலை தான் உள்ளது. காரணம் இந்த நாட்களில் வெயில் அதிகமாக இருக்கும். மே 4 ஆம் தேதி தொடங்கும் இந்த கத்திரி வெயிலின் தாக்கம் இருக்கும். இந்த வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
வெயிலை சமாளிக்க மக்கள் கடைகளில் பழச்சாறுகளையும், குளிர்பானங்களையும் வாங்கி பருகி வெப்பதை தணித்து கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், உடல் உபாதைகளையும் மறந்து விடுகின்றனர். பணத்தை மட்டுமே பிரதானமாகவும் மக்களின் உடல் நலத்தை பற்றி அக்கறை கொள்ளாத இந்த கடைகள் ரசாயனங்கள் கலந்த குளிர்பானங்களை விற்பனை செய்கின்றன இதை பருகுவதால் வயிற்று உபாதைகள்,சளி பிடித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்த்து வீட்டிலேயே தயாரித்த பழச்சாறு, மோர் மற்றும் இளநீர் போன்றவற்றை பருகலாம். உணவுகளில் அதிக காரம், இறைச்சி,பரோட்டா போன்ற கடினமான உணவுகளை தவிர்த்து கீரை,காய்கறிகள்,பழங்கள் என எளிய உணவுகளை எடுத்துகொள்ளலாம்.
இதமான தண்ணீர், மண்பானையில் வைத்த நீரை பருகுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.அதிகளவு வியர்வையினால் உடலில் நீர்த்தன்மை வற்றிபோகும் சூழல் உருவாகும் எனவே அதிகளவில் நீரை பருக வேண்டும்.
முடிந்தவரை காலை பதினோரு மணி முதல் மாலை 3 வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும் இந்நேரத்தில் சூரியனின் கதிர்கள் நேரடியாக உடலில் படுவதால் சரும பிரச்சினைகள் தோன்றும் இவற்றை தவிர்க்க அடர்த்தியான நிறம் உடைய உடைகளை அணிவதை தவிர்த்து வெண்ணிற பருத்தி ஆடைகளை அணியலாம்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பர்கள், உடல் நலம் இருந்தால்தான் உழைக்க முடியும் ஆகவே உடல் நலத்தை பாதிக்கும் உணவுகளை தவிர்போம் ஆரோக்கியம் காப்போம்.